அம்மா- தமிழ் கவிதை - அம்மாவின் அன்பு, amma tamil kavithai

    அம்மா,அப்பா,மனைவி,குழந்தைகள், சொந்தபந்தம் எல்லாரையும் விட்டு அயல் நாடுகளில் உழைத்து கொண்டிருக்கும் அன்பு உறவுகளுக்கு இந்த கவி அர்ப்பணம்.

நீண்ட நாட்களுக்கு பிறகு உழைத்து களைத்து சொந்த ஊருக்கு திரும்பும் அனைவரும் இந்த கவிதையின் ஒவ்வொரு வரிகளையும் கண்டிப்பாக அனுபவித்து இருப்பீர்கள்.

நான் பிழைக்கும் ஊர் விட்டு
பிறந்த ஊர் போகயில
வருகைய எதிர்பாரத்து
வாசலுல நின்றிடுவாள்
வாபா செல்லமுனு
வாயாற வரவேற்பாள்
வெல்லம் போட்ட காப்பி தண்ணி
விரசா தந்திடுவாள்
வந்த களைப்பு போக
வெந்நீர விளாவ விட்டு
தலைக்கு எண்ணைவச்சு
அரப்ப அரச்சு எடுத்து
அன்போட நீராட்டுவாள்
பக்குவமாய் சோறாக்கி
பந்தி வாழை இலை போட்டு
பக்கத்தில் உட்கார்ந்து
பணிவோட பரிமாறுவாள்
சுடு சாதம் நெஞ்சடைக்க
பதறிப்போய் தலையத்தட்டி
பச்ச தண்ணி தான் கொடுத்து
பதறாம சாப்டுனு
பரிவோட உபசரிப்பாள்
அறுசுவைகள் அத்தனையும்
அடுக்கடுக்கா ஆக்கி வச்சு
அத்தனையும் தீரும் வரை
அரை அடி கூட நகரமாட்டா
கண்டத உண்டு
கிடச்சத சாப்பிட்டு
வெந்து வெந்து செத்த நாவிற்கு
தேடித் தேடி தேன் சுவையா சமச்சு வைப்பாள்
போதும் போதும்னு நான் சொன்னாலும்
பிடி சோறு வைக்குறனு
பிடிவாதம் பண்ணிடுவாள்
பசிக்கு கொஞ்சமும்
பாசத்துக்கு மிச்சமும் உண்டு
கை கழுவும் முன்னே
மதிய உணவிற்கு ஆயத்தம் ஆயிடுவாள்
விடுமுறை தான் முடிஞ்சு
பிழைக்கும் ஊர் திரும்பயில
போகவும் மனமில்லாம
இருக்கவும் வழியில்லாம
உள்ளுக்குள்ள அழுதுகிட்டு
சிப்ப மட்டும் காட்டிகிட்டுநான் கையசைச்சு போகயில
கையசைக்க முடியாம
வழிய மட்டும் பார்த்துகிட்டு
விழியினில கண்ணீர் வச்சு
சிலையாட்டம் நின்றிடுவாள் என் அம்மா............... 

 என்றும் அன்புடன் மணிகண்டன்

 

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்